சென்னை, May 10, 2017 /PRNewswire/ --
பெருநிறுவனங்களுக்கான விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) SPICe (ஒரு நாள் - ஒரு படி) நிறுவனப் பதிவின் புதிய பதிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. SPICe என்பது ஒரு நிறுவனத்தை மின்னணு ரீதியாகத் தொடங்குவதற்கான எளிமைப்படுத்தப்பட்ட படிவம் என்பதைக் குறிக்கிறது. புதிய SPICe படிவம் நிறுவனம் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் ஒரே நாளில் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு மத்திய பதிவு மையத்தின் தற்போதுள்ள நடைமுறை மற்றும் நிறுவுதலின் மறு-உருவாக்கத்தை பயன்படுத்திக் கொள்கின்றது. SPICe ஆனது இயக்குநர்களுக்கான அடையாள எண் (DIN), பெயர் அனுமதி, நிறுவனம் தொடங்குதலுக்கான சான்றிதழ், நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் வரிப் பிடித்தத்துக்கான கணக்கு எண் (TAN) ஆகியவற்றை வழங்குவதற்கான செயல்முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே படிவத்தில் ஒரே செயல்முறையின் கீழ் வழங்குகிறது. IndiaFilings தலைமைச் செயலதிகாரி Lionel Charles, புதிய SPICe படிவம் பற்றியும், இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதில் இந்தியாவும் MCA வும் எந்த அளவுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளன என்பதைப் பற்றியும் மிக விரிவாக விளக்குகிறார்.
(Photo: http://mma.prnewswire.com/media/509498/SPICe_Process.jpg )
INC-29 - SPICe க்கு ஒரு முன்னோடி
புதிய SPICe படிவத்தைப் பற்றிப் பார்க்கத் தொடங்குவதற்கு முன்னர், நிறுவனம் தொடங்குதலுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிலவற்றைப் பற்றியும், இன்று ஒரே நாளில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது எவ்வாறு சாத்தியமாகியுள்ளது என்பதைப் பற்றியும் ஒருவர் பார்க்க வேண்டும். SPICe படிவத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், ஒரே படியில் நிறுவனம் தொடங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக மே, 2015 இல் MCA ஆல் படிவம் INC-29 அறிமுகப்படுத்தப்பட்டது. INC-29 இன் கீழ், DIN, பெயர் அனுமதி மற்றும் நிறுவனம் தொடங்குதல் ஆகிய நடைமுறைகள் ஒரே செயலாக்கத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டன. இருப்பினும், INC-29 லும் குறைபாடுகள் இல்லாமலில்லை. INC-29 படிவத்தில் பெயர் முன்பதிவு மற்றும் நிறுவனம் தொடங்குதல் ஆகியவை ஒரே படியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால், நிறுவனங்களுக்கான பதிவாளரால் நிறுவனத்தின் பெயர் நிராகரிக்கப்படும்போது, நிறுவனம் தொடங்குதலுக்கான ஆவணங்களை மறுபடியும் முழுமையாக தயார் செய்ய வேண்டியிருந்தது. அதோடு, விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ROC யால் பரிசீலிக்கப்பட்டதால், இது தொடங்குதலுக்கான காலக்கெடு மாறுபடுவதற்கு வழிவகுத்தது.
மத்திய பதிவு மையத்தின் கீழ் தொகுத்தல்
மார்ச் 2016 இல், அனைத்து பெயர் அனுமதிகளையும் நிறுவனம் தொடங்குதலுக்கான செயலாக்கத்தையும் தொகுப்பதற்கு மத்திய பதிவு மையத்தை MCA அறிமுகப்படுத்தியது. அனைத்து பெயர் அனுமதிகளையும் நிறுவனம் தொடங்குதலுக்கான செயலாக்கத்தையும் ஒரே மையத்தின் கீழ் ஒன்றிணைத்ததன் மூலம், பெயர் அனுமதி, நிறுவனம் தொடங்குதல் போன்றவற்றுக்கு ஆகும் நேரம் முற்றிலுமாக நெறிப்படுத்தப்பட்டது மற்றும் செயலாக்க நேரம் கணிசமான அளவு குறைக்கப்பட்டது. தற்சமயம், கிட்டத்தட்ட நிறுவனம் தொடங்குதல் மற்றும் பெயர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில் அனுமதி வழங்கப்படுகிறது. அதோடு, மத்திய பதிவு மையத்தின் கீழ் நிறுவனம் தொடங்குதலும் பெயர் அனுமதியும் தொகுக்கப்படுவது 5 வெவ்வேறு படிகளை ஒரே செயலாக்கத்தின் கீழ் வழங்குகின்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட SPICe படிவத்துக்கு ஒரு அடித்தளம் ஏற்படுத்தியது.
eMOA மற்றும் eAOA மூலம் SPICe
அக்டோபர் 2016 இல், eMOA மற்றும் eAOA வை தாக்கல் செய்வதற்கான வசதிகளுடன் முதலாவது SPICe படிவத்தை MCA அறிமுகப்படுத்தியது. ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது, சங்கத்தின் ஒப்பந்தப் பத்திரம் மற்றும் சங்கத்தின் விதிகளை உருவாக்குவதற்கு ஒரு தொழில் வல்லுநருக்கு கணிசமான நேரம் தேவைப்படுகிறது. இதை எளிமையாக்குவதற்கும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் உரிமை ஆவணங்களையும் தரநிலைப்படுத்துவதற்கும் eMOA மற்றும் eAOA உடன் கூடிய SPICe படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
SPICe அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு நிறுவனம் தொடங்குவதில் உள்ள முந்தைய படிவங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு SPICe படிவம் தான் ஒரே வழி என்ற நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய SPICe படிவத்தை பெயர், நிறுவனத்தைத் தொடங்குதல் மற்றும் PAN ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். SPICe படிவத்தைப் பயன்படுத்தி DIN பெற முடியாது. எனவே DIN மற்றும் TAN விண்ணப்பங்கள் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
புதிய SPICe படிவம் - ஒரே நாளில் நிறுவனம் தொடங்குதல்
ஏப்ரல் 2017 இல், MCA ஒரு விளம்பரம் வாயிலாக SPICe அம்சங்களை தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. புதிய SPICe படிவம் DIN பெறுதல், பெயர் முன்பதிவு செய்தல், நிறுவனம் தொடங்குதல், PAN மற்றும் TAN பெறுதல் ஆகிய அனைத்துச் செயல்முறைகளையும் ஒரே படிநிலையின் கீழ் இணைக்கும் - அதன் மூலம் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல்முறை முழுவதும் ஒரே படிநிலையின் கீழ் தொகுக்கப்படுகிறது. புதிய SPICe படிவம் DIN மற்றும் TAN பெறும் செயல்முறையையும் ஒரே படிநிலையின் கீழ் இணைக்கிறது, இதனால் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இறுதியாக, நிறுவனம் தொடங்குதலுக்கான கட்டணம் ரூ. 2000 லிருந்து ரூ. 500 ஆக குறைக்கப்படுவதாகவும் இந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நிறுவனம் தொடங்குதல்
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு பல்வேறு ஆவணங்களைத் தயாரித்து MCA விடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அனைத்து SPICe படிவங்களும் 1 நாளுக்குள் பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை ஆகும் மற்றும் இது மத்திய பதிவு மையத்தின் வாயிலாக அரசாங்கத்தால் நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஏனெனில், மத்திய பதிவு மையம் நிறுவனம் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை ஏற்கனவே 1 நாளுக்குள் பரிசீலித்து முடிவெடுக்கிறது.
இருப்பினும், ஒரு நிறுவனம் தொடங்குவதற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை இன்னும் மிக அதிகமானதாகவே இருக்கிறது மற்றும் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது, பெரும்பாலான நிகழ்வுகளில் இதற்கு சுமார் 1-2 நாட்கள் தேவைப்படுகிறது. புதிய SPICe மற்றும் eMOA இன் கீழ், இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் MOA/AOA சாட்சிகள் அனைவருக்கும் DSC தேவைப்படுகிறது.
எனவே, ஒரு SPICe படிவம் சமர்ப்பிக்கப்பட்டு, நிறுவனம் தொடங்குதலுக்கான ஆவணங்கள் ஒரு தொழில் வல்லுநரால் 1 நாளுக்குள் தயாரிக்கப்பட்டாலும் கூட, ஒரு நிறுவனம் தொடங்குவதற்கு சுமார் 2-3 நாட்கள் ஆகின்றது. (ஆவணம் தயாரிப்பதற்கும் டிஜிட்டல் கையொப்ப விண்ணப்பத்துக்கும் 1 நாள், ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 1 நாள் மற்றும் தொடங்குதலைச் செயலாக்குவதற்கு 1 நாள்). இருப்பினும், டிஜிட்டல் கையொப்பத்தை கைவசம் வைத்திருப்பவர்களுக்கு, ஒரே நாளில் நிறுவனம் தொடங்குவது என்பது நிச்சயமாக சாத்தியமானது தான்.
எனவே, மிகவும் தனித்துவமான பெயருடன் ஒரு நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள தொழில் வல்லுநர்களுக்கு / தொழில்முனைவோருக்கு, SPICe படிவமானது நிச்சயமாக ஒரு நிறுவனத்தை மிக எளிதாகப் பதிவு செய்வதற்கான மிகப் பெரிய திருப்பு முனையாக இருக்கும். தொழில் வல்லுநர் மிகுந்த நம்பிக்கையுடன் மிகவும் தனித்துவமான பெயரைக் கொண்ட SPICe படிவத்தைத் தாக்கல் செய்ய முடிந்தால், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான பெரும்பாலான நடவடிக்கைகள் இணைக்கப்பட்டு அதே வாரத்தில் DIN, பெயர் அனுமதி, தொடங்குவதற்கான சான்றிதழ், PAN மற்றும் TAN ஆகியவை தொழில் வல்லுநருக்கு வழங்கப்படும்.
IndiaFilings பற்றி
IndiaFilings என்பது நிறுவனப் பதிவுகள், வர்த்தகச் சின்னம் தாக்கல் செய்தல், GST பதிவு, GST தாக்கல் செய்தல், வருமான வரி தாக்கல் செய்தல், மற்றும் கிளவுட் சார்ந்த கணக்குப் பதிவு மென்பொருள் சேவைகள் போன்ற பல வகையான சேவைகளை வழங்குகின்ற இந்தியாவின் ஆன்லைன் தளம் ஆகும். IndiaFilings ஆயிரக்கணக்கான தொழில்முனைவோருக்கும் தனிநபர்களுக்கும் தரமான மற்றும் நம்பகமான வணிகச் சேவைகளை மலிவான விலையில் ஆன்லைன் வாயிலாக வழங்குவதற்கு உதவியுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து பார்வையிடுங்கள் https://www.indiafilings.com/company-registration.
ஊடகத் தொடர்பாளர்:
Deepak Menon
[email protected]
+91-44-40247777
PR மேலாளர்
IndiaFilings
Share this article